ஜனாதிபதிக்கும் வடக்கு போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் வடக்கு போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

iuஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கடந்த 18-06-2016 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதான திறப்பு விழாவிற்கு வருகை தந்த வேளை, வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வடக்கு அமைச்சர்,

இந்த கலந்துரையாடலில் முக்கியமான இரண்டு விடயங்கள் தொடர்பில் தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும்,

குறிப்பாக தனது அமைச்சு தொடர்பான அதாவது போக்குவரத்து நியதிச் சட்டம் தொடர்பாகவும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் தாம் அவருடைய விசேட கவனத்திற்குக் கொண்டுவந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் கடந்த மாகாண சபை அமர்வின்போது, வட மாகாணத்திற்கான பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஒன்றை உருவாக்குவதற்க்கான நியதிச் சட்டம் இறுதி அங்கீகாரம் பெறப்பட்டிருப்பதாகவும்,

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நியதிச்சட்டமானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும், அவ்வாறு அனுப்பப்படவுள்ள இவ் நியதிச் சட்டத்தை உடனடியாக அங்கீகரிக்க ஆவன செய்யுமாறும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவுடன் வடக்கில் உள்ள போக்குவரத்து சீர்கேடுகளை விரைவாக நிவர்த்தி செய்யவுள்ளதாகவும்,

அத்தோடு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான போக்குவரத்து சேவையை வழங்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு கூறியதாக தெரிவித்தார்.

அதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாம் ஆளுநருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு,

இவ்வாறாக அனுமதிக்கப்பட்டவுடன் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் இருப்பதை பார்க்கிலும் மிகவும் தரமான ஓர் சேவையை எனது மக்களுக்கு வழங்குவேன் என்றும் வடக்கு மாகாணத்தை போக்குவரத்து துறையிலே வளர்ப்பதே தமது பிரதான நோக்கம் எனவும், நியதிச் சட்டம் அமுலானதும் சட்டம் தனது கடமையை சரியாகச் செய்யும் எனவும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அத்தோடு நீண்ட காலமாக எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய பலரும், அரசியல் கைதிகள் பலரும் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அந்த நிலையிலே அவர்களது குடும்பங்கள் எமது மாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் வறுமையாலே அன்றாட உணவுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டும், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி என்பன வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் தாம் ஜனாதிபதிக்குத் தெரிவித்ததாகவும்.

அதே சந்தர்ப்பத்தில், கடந்த காலத்தில் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியதோடு, இவ்வாறு படிப்படியாக ஏனையவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வர்த்தக சங்கங்களுக்கான விசேட கலந்துரையாடல்

ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் வர்த்தக பெருமக்கள், அந்த வகையில் எமது வடமாகாணத்தின் வர்த்தகர்கள் யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஏனைய போது விடயங்களிலும் கணிசமான பங்கினை ஆற்றியிருகின்றார்கள்.

குறிப்பாக வறிய மாணவர்களின் கல்விக்காகவும் அவ்வப்போது ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போதும் இவர்களது பங்கு மற்றும் செயற்பாடுகள் அளவுக்கு அதிகமாகவே காணப்பட்டு இருக்கின்றது.

ஆனால் இன்று இவ்வாறான வர்த்தகர்கள் தங்களது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியாமலும் எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை ஓர் ஸ்திரமான நிலையில் வைத்திருக்க முடியாமலும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அந்த வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு துரிதமாக செயற்படுவது காலத்தின் தேவையாக அமைகின்றது.

குறிப்பாக இவ்வாறு கஷ்டப்படுகின்ற வர்த்தகர்களை இவ்நிலமையில் இருந்து மீட்டெடுப்பதற்கும் எமது பொருளாதரத்தை ஒரு ஸ்திரநிலையில் வைத்திருப்பதற்கும் வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சர் சில திட்டங்களை வகுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக வடமாகாணத்தில் இருகின்ற ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வர்த்தக சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், மற்றும் உப செயலாளர் ஆகியோர்களை எதிர்வரும் 23.06.2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இல 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள வர்த்தக சங்கத்தின் கேட்போர் கூடத்திற்கு தவறாது சமூகம் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படி விசேட கலந்துரையாடலுக்கு வருகின்ற வர்த்தக சங்க பிரதிநிதிகள் தத்தமது மாவட்டத்தில் இருக்கின்ற பிரச்சினைகளையும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரநிலையில் வைத்திருப்பதற்கான ஆக்க பூர்வமான ஆலோசனைகளையும் எழுத்து வடிவில் கொண்டுவருமாறும் கோரியுள்ளார்.

மேலும் இவ்வாறான யோசனைகள் எதிர்காலத்தில் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும் எனபதோடு, வடமாகாணத்தில் வர்த்தக வாணிபத்தினை சீர்செய்வதற்கும் அவற்றை நிருவகிப்பதற்கும், ஓர் வடமாகாணம் சார்ந்ததான வர்த்தக வாணிப அதிகாரசபை ஒன்றை உருவாகுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

மேலும் வடமாகாணத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள், வர்த்தக பெருமக்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் அனைவரும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மிகவும் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் வருகின்ற 01.07.2016 இற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுநிற்கின்றார்.

இவ்வாறான முற்றுமுழுதான மக்களின் கருத்துக்கள் நல்லதொரு ஸ்திரமான பொருளாதாரத்தை வடமாகாணத்தில் கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும் என்றும் தான் உருவாக்கப்போகும் நியதிச்சட்டதிற்கு இது பக்கபலமாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.